Wednesday, April 28, 2010

கிட்னி ஃபிரை


தேவையான பொருட்கள்

ஆட்டு கிட்னி – கால் கிலோ
உப்பு தூள் – அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – முன்று இதழ்
பச்சை மிளகாய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பட்டை – சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் – ஒரு சிட்டிகை
தக்காளி ஒன்று – சிறியது
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
நெய் – கால் தேக்கரண்டி

செய்முறை

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.

3. கிட்னியில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தக்காளியை நான்கு துண்டாக வெட்டி அதில் போடவும்.

4. அவற்றை ஐந்து நிமிடம் ஊறவைத்து, குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல், முன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

5. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

6. தனியாக ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை, வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளிக்கவும்.

7. வற்றிய கிட்னியை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து, கொத்துமல்லி, புதினா, நெய், சேர்த்து, கரம் மசாலா, தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. கிட்னியை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும். ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.

2. இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட சுலபமாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.

3. காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வளவாக இருக்காது. அது கிடைக்க வில்லை என்றால் சாதா மிளகாய் தூளே போதுமானது. இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.

4. குழந்தைகளுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு நெய்யிலேயே கூட செய்து கொடுக்கலாம்.

Sunday, April 25, 2010

அவல் கேக்


தேவையானப் பொருட்கள்:
அவல் 400 கிராம்
சீனி 250 கிராம்
நெய் 100 மி.லி.
முந்திரி பருப்பு 50
ஏலக்காய் 5
கேசரிப் பவுடர் ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி
செய்முறை:


அவலை நன்றாகப் புடைத்து, கல் நீக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், அவலைப் போட்டு, நன்றாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். அவலை வறுத்து எடுத்து அதே வாணலியில் மேலும் சிறிது நெய் விட்டு, முந்திரி பருப்பையும், தேங்காயை துருவலையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சீனியை அதில் கொட்டி கரைத்து அடுப்பில் வைக்கவும். 
சீனிக் கரைசல் நன்றாகக் கொதித்து பாகாக இறுகி வரும்.பாகு கம்பி பதமாக வரும் பொழுது பொரித்து வைத்துள்ள அவல், சீனி,நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி கேசரிப் பவுடர், தேங்காய் பூ ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டி நன்றாகக் கிளறிவிட வேண்டும்.பதமாக வந்ததும், இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, சமமாகப் பரப்பி, கேக்குகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதுவே அவல் கேக் என்பது சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும். திருவிழா நாட்களில் செய்து சாப்பிட ஏற்றதொரு பலகாரம்.

பப்பாளி பழ அல்வா

தேவையான பொருட்கள்
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 7
பாதாம் பருப்பு - 7
செய்முறை
பப்பாளி பழ அல்வா
1. முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
2. பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
3. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
4. பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
5. பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
6. அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
7. பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
8. பப்பாளி பழ அல்வா தயார்.

குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.


* பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
* சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
* நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
* மற்ற செய்முறை மேற்கூறியவாறுதான்.

கொத்து பரோட்டா

 
தேவையான பொருட்கள்

பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

கட்லெட்

தேவையான பொருட்கள்
  உருளைக்கிழங்கு : 7
குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ் : 1 கப்
சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது)
செய்முறை
கட்லெட்
செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு பின்னர் குடைமிளகாய், காய்கறிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி முக்கால் பாகம் வேகும் வரை வைத்திருக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது)

இந்த காய்கறிக் கலவையை மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசையவும். மிகவும் இலகுவாக இருந்தால் சிறிதளவு சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸ் கொட்டி பரவலாக வைக்கவும். மற்றொரு தட்டில் சிறிதளவு தண்ணீருடன் சோளமாவு/மைதாமாவு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி(வடைக்கு செய்வது போல் சற்று தடிமனாக) அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் கிரம்ஸில் புரட்டி தனியாக வைக்கவும்.(மாவு இலகுவாக இருந்தால் புரட்டும்போது உடைந்துகொள்ளும் கவனமாக செய்யவும்)

எல்லா கலவையும் இப்படி செய்து முடித்தபின் இந்த கட்லெட் டை அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுக்கவும்.

பின்னர் ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணைவிட்டு கட்லெட்டுகளை போட்டு செந்நிறாமாக வருத்து எடுக்கவும். ஒரு பக்கத்துக்கு சுமார் 2 நிமிடம் இருந்தால் போதும்.

சுவையான கட்லெட்டை டொமாடோ சாஸுடன் பரிமாரவும்.

சோயா பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 தம்ளர்
சோயா - 1 தம்ளர்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1/2 தம்ளர்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.
செய்முறை

1. சோயாவை ஒன்றிரண்டாக உடைத்து, தோலை புடைக்கவும்.
2. அரிசியை சோயாவுடன் சேர்த்து, பாலுடன் 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
3. உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, பொங்கலுடன் சேர்க்கவும்.
4. நல்லெண்ணய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து, பொங்கலில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்.